ஜோதிடம் வாழ்க்கையை மாற்றுமா ? (Will Astrology Change Life)
ஜோதிடம் வாழ்க்கையை மாற்றுமா ? (Will Astrology Change Life) ஆயக்கலைகள் 64 கலைகளில் ஜோதிட கலையும் ஒன்று என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இன்று நாம் ஜோதிட கலையை மூடநம்பிக்கை என்று நினைக்கும் அளவிற்கு இன்றைய சூழ்நிலை சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் நம்மில் பலருக்கு ஜோதிடம் பற்றிய புரிதல்கள் இல்லாத காரணத்தினால் அனைத்தையும் நம்பிக் கொண்டும் நம்பாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஜோதிட கலையால் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்ற முடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக மாற்ற முடியும் என்று சொல்லலாம். அதற்கு முதலில் ஜோதிட கலையை பற்றிய புரிதல்கள் நமக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
மனிதனின் வாழ்க்கையில் ஐந்து வகையான சக்கரங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஐந்து வகையான சக்கரங்களும் சேர்ந்துதான் மனிதனை இயக்குகின்றன.
ஐந்து வகையான சக்கரங்கள்:
1. பிறப்புச் சக்கரம்
இந்த பிறப்புச் சக்கரத்தை நம்மால் தீர்மானிக்க இயலாது. நாம் இந்த ஜென்மத்தில் யாருக்கு பிறக்க வேண்டும் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் எங்கு வளர வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. மனிதனால் இந்த பிறப்புச் சக்கரத்தை மாற்றி தந்தை, தாய், உடன் பிறந்தவர்கள் என எதையும் மாற்ற முடியாது.
இந்த பிறப்புச் சக்கரம் அமைவதற்கு முக்கிய காரணமே நமது கர்ம வினை தான்.
ஜோதிடத்தில் கேந்திரத்தில் ஒரு பாவகமும், திரிகோணத்தில் ஒரு பாவகமும், உப ஜெய ஸ்தானத்தில் ஒரு பாவகமும் இருக்கும். இது பிறப்புச் சக்கரத்தை சொல்லும்.
- கேந்திரத்தில் நான்காம் இடம் ➨ தாயாரைப் பற்றி சொல்லும்.
- திரிகோணத்தில் ஒன்பதாம் இடம் ➨ தந்தையாரை பற்றி சொல்லும்.
- உப ஜெய ஸ்தானத்தில் மூன்றாம் இடம் ➨ உடன்பிறப்புகளை அதாவது சகோதர சகோதரிகளை சொல்லும்.
நம் தாய், தந்தை, உடன்பிறப்புகள் எதுவரையில் (எவ்வளவு காலம்) நம்முடன் பயணிப்பார்கள் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. இதை நம்மால் மாற்ற இயலாது.
2. இறப்பு சக்கரம்
இந்த இறப்பு சக்கரத்தை நம்மால் தீர்மானிக்க இயலாது. அதாவது ஒரு மனிதனுக்கு எப்பொழுது இறப்பு நடக்கும் என்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் ஜோதிடத்தில் அதீத தேர்ச்சி பெற்று இறைவனின் அனுக்கிரகம் பெற்று அனைவருக்காகவும் வாழும் ஒரு மனிதனால் இறப்பு நடக்கக்கூடிய தேதியையும் நேரத்தையும் துல்லியமாக கணிக்க முடியும். ஏன் இறைவன் இவர்களுக்கு இந்த ஞானத்தை கொடுக்கிறான் என்றால் இவன் பக்குவம் பெற்ற நிலையில் இருப்பதால் மட்டுமே இவனுக்கு இந்த ஞானத்தை இறைவன் வழங்குகின்றான்.
பக்குவம் பெறாத மனிதர்களால் இறப்புச் சக்கரத்தை கணிக்க இயலாது. ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் பக்குவம் பெற்ற மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக இதை தவறாக பயன்படுத்த மாட்டான். அதனால்தான் இறைவன் இவனுக்கு இந்தப் இறப்பு சக்கரம் அமைப்பை கணிக்க உதவி புரிகிறான்.
இறப்புச் சக்கரத்தில் அடங்குபவை விதியின் காரணமாக இறப்பு (Karma Based Death), அகால மரணம் அதாவது துர்மரணம் (Accident Death), நோயினால் தாக்கப்பட்டு இறப்பு (Health Affects Death), தன்னுடைய இறப்பை தானே தேடிக் கொள்ளுதல் (Suicide)
விதியின் காரணமாக இறப்பு அதாவது நாம் பிறப்பெடுத்த கர்ம வினையை அனுபவித்த பிறகு இந்த பூமியை விட்டு செல்வது.
அகால மரணம் அதாவது துர்மரணம் என்பது எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துக்கள், கண்டத்தின் மூலம் இறப்பு, பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சாபத்தினால் இறப்பு, செய்வினைகள் அமானுஷ்யம் அதனால் முடங்கிப் போகி இறப்பு.
இந்த காலத்திலும் சாபம் பலிக்குமா? ஒரு மனிதனுக்கு கண்டம் ஏற்படுமா? செய்வினைகள் அமானுஷ்யம் உண்டா? என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அனைத்தும் உண்மையே. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு. ஒரு பந்தை எடுத்து ஒரு சுவரில் வீசினால் அந்த பந்தானது திரும்பவும் வீசப்பட்ட இடத்திற்கு திரும்ப வரும் அல்லவா அதுதான் கர்மா.

நாம் எவ்வளவு வேகமாக பந்து சுவரில் வீசுகிறோமோ அந்த அளவிற்கு பந்தானது நம்மை நோக்கி வேகமாக வரும் அல்லவா அது போல தான் நாம் செய்த கர்ம வினைகள், நாம் செய்த பாவங்கள், நம் முன்னோர்கள் செய்த பாவங்கள் வேகமாக நம்மை நோக்கி வரும். பந்து வேகமாக வீசினால் எப்படி பந்து வேகமாக நம்மை தாக்குமோ அதேபோல் நாம் அதிகமாக சேர்த்து வைத்த பாவம் ஒரு நாள் நம்மை அழித்துவிடும். இதற்கு மந்திரமோ, ஜாதகமோ, பிரசன்னமோ, கடவுள் வழிபாடு எதுவும் பலன் அளிக்காது.
அதுவே நாம் பந்தை வேகம் குறைவாக வீசினால் அது நம்மை வந்து சென்றடையும் நேரத்திற்குள் நாம் அந்த இடத்தை விட்டு சென்று விடலாம் அல்லவா ? அதுபோலத்தான் உங்களது கர்ம வினை, உங்களது பாவங்கள், உங்களது முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவங்கள் குறைவாக இருந்தால் இதை பிரசன்னத்தின் மூலம் கண்டறிந்து உரிய இறை வழிபாடு செய்து கண்டத்திலிருந்து, கர்ம வினையிலிருந்து தப்பிக்கலாம்.
பிரசன்னத்தின் மூலம் அனைவரின் கர்மாவையும், பாவத்தையும் குறைத்து அவர்களை கண்டத்தில் இருந்து தப்பிக்க வைத்து நல்வழி படுத்த முடியாது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் கர்ம வினை அவர்களை இறைவனை நோக்கியோ, ஜோதிடத்தை நோக்கியோ, பிரசன்னத்தை நோக்கியோ வரவிடாது. அப்படி ஏதாவது ஒரு சூழ்நிலையில் இவர்கள் இதை நோக்கி வரும் பட்சத்திலும் கூட ஏதாவது ஒரு சூழ்நிலையில் இவர்கள் கேட்டுச் சென்ற பிரசன்னத்திற்கான பரிகாரங்களை செய்யவிடாமல் தடுக்கும். இவர்களுக்கு இவர்களது மனமே மிகப்பெரிய எதிரி.
மனம் தெளிவாக இருந்தாலே யாராக இருந்தாலும் கண்டத்திலிருந்து தப்பித்து விடலாம்.
இறப்பு சக்கரத்தை வைத்து நிறைய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். உதாரணத்திற்கு ஒரு தலைவனின் ஜாதகத்தில் சாபங்கள் அதிகம் இல்லாமல் இருந்தால் அவனுடன் பயணிப்பவர்களுக்கு எந்த ஒரு கண்டமும், உயிரிழப்பும் ஏற்படாது. அதுவே தலைவனின் ஜாதகத்தில் சாபங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவனுடன் பயணிப்பவர்களுக்கு கண்டமோ உயிர் இழப்புகளோ கண்டிப்பாக ஏற்படும்.
உயிரிழப்புகளையும், கண்டங்களையும், தோஷங்களையும், குற்றங்களையும், செய்வினைகளையும் குறிப்பிடும் கிரகம் ➨ மாந்தி பகவான்
நாம் இந்த ஜென்மத்தில் சரியாக இருக்கலாம் ஆனால் கடந்த ஜென்மத்தில் செய்த குற்றத்திற்காக, செய்த கர்மவினைக்காக, நம் முன்னோர்கள் செய்த கர்ம வினைக்காக இந்த ஜென்மத்தில் நாம் பிறப்பெடுத்து இருக்கிறோம். அதனால் கட்டாயமாக இதெல்லாம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதுதான் விதி. இதை நீங்கள் புரிந்து கொண்டாலும் சரி புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் சரி இதுதான் உண்மை.
“காலம் அறிந்து செயல்பட்டால் கர்மாவின் தாக்கத்தை குறைக்கலாம். உயிரிழப்புகளையும் கண்டத்தையும் கட்டுக்குள் வைக்கலாம்”
தாய் தந்தையரை வைத்து நாம் இயங்குகின்றோம். தாய் தந்தையரை குறிப்பிடும் கிரகங்கள் சந்திரன் மற்றும் சூரியன். இந்த இரண்டு கிரகங்களும் இல்லை எனில் எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஒரு நபரின் ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்கள் வலிமையாக இருக்கும் பட்சத்தில் தாய் தந்தையின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். அதுவே அந்த நபரின் ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்கள் வலிமை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தாய் தந்தையரின் அன்பைக் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
நம் தாய் தந்தையரின் சொத்துக்கள் எப்படி நமக்கு சொந்தமோ அதுபோல அவர்கள் செய்யும் பாவ புண்ணியத்திலும் சிறிது பங்கு நமக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதுபோலத்தான் ஒரு பகுதியை ஆட்சி செய்யும் தலைவனின் ஜாதகமும் அமையும். தலைவனின் ஜாதகம் நன்றாக இருந்தால் அவனைச் சார்ந்த மக்களுக்கு நன்மைகள் ஏற்படும். அதுவே அந்த தலைவனின் ஜாதகம் நன்றாக இல்லை எனில் அவனது ஆட்சிக் காலத்தில் நோயின் தாக்கம், இயற்கை பேரழிவுகள், சமநிலையற்ற மனிதர்களின் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும்.
இறப்பு சக்கரத்தை பற்றி ஆய்விற்கு இது போதும் என்று நினைக்கின்றேன். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கு உண்மை புரிய வரும்.
3. காலச்சக்கரம்
காலச்சக்கரம் இந்த சக்கரம் தான் பிரபஞ்சத்தை இயக்குகிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒரு மனிதன் யாருடன் எந்த நேரத்தில் எந்த சமயத்தில் பங்கு பெற வேண்டும் எந்த சமயத்தில் அவன் ஒருவரை விட்டு விலக வேண்டும். யாருக்கு எந்த நேரத்தில் எது கிடைக்க வேண்டும். எந்த நேரத்தில் யாருக்கு எது கிடைக்கக்கூடாது இதுபோன்று அனைத்தையும் தீர்மானித்து அவனுக்கு அவனது கர்மவினைக்கு தகுந்தவாறு பலன்களை பிரித்துக் கொடுப்பதே இந்த காலச்சக்கரம் தான். இதை டைம் ட்ராவல் (Time Travel) என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு மனிதன் பிறந்த நாளிலிருந்து அவனுக்கு ஜாதகம் எழுதப்பட்டு அவனது வாழ்நாளில் அவனது ஒவ்வொரு சம்பவத்திற்கும் வழிநடத்த இறைவனால் கொடுக்கப்பட்டது தான் இந்த ஜாதகம் இந்த பிரசன்னம் இவையெல்லாம்.

காலங்கள் மாறிக்கொண்டே வருகிறது. காட்சிகளும் மாறிக்கொண்டே வருகிறது. ஆனால் அனைத்து மனிதனுக்கும் 24 மணி நேரம்தான். இந்த 24 மணி நேரம் அனைத்து மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தை அதாவது இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுபவனே வெற்றியாளன். நேரத்தை பயன்படுத்தாமல் நேரம் வரும் நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருப்பவன் தோல்வியாளன்.
இன்றைய சூழலில் மக்கள் 40 வயதில், 50 வயதில் திருமணம் செய்து கொள்வேன், முறையற்ற காதல், முறையற்ற திருமணம், திருமணம் ஆகாமல் உறவு நிலை என்று அவர்களுக்கு அவர்களே திட்டம் தீட்டி வைத்திருக்கிறார்கள். காரணம் அவர்கள் கற்ற கல்வியின் காரணமாக வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற சிந்தனையின் காரணமாகவே வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் படி, காலம் அறிந்து எந்த வயதில் எந்த கிரக நிலைகள் சம்பந்தப்படும் பொழுது திருமணம் செய்ய வேண்டும், வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகளை கடந்து செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள். அந்த பொக்கிஷத்தின் அருமை நமக்கு தெரியவில்லை.
இன்றைய சூழ்நிலையில் தவறான ஜோதிட வழிகாட்டுதலும் கூட ஜோதிடத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமே. என்னுடைய கருத்து என்னவென்றால், அனைவரும் ஜோதிடம் கற்க வேண்டும் வாழ்க்கையின் எதார்த்தத்தையும், சம்பவ போக்கையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய மருத்துவ படிப்பு, அறிவியல் துறைச் சார்ந்த படிப்பு, பொறியியல் துறை சார்ந்த படிப்பு, கலைத்துறை சார்ந்த படிப்பு என பல படிப்புகளை படித்துவிட்டு பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படிக்கின்றோம் பணம் சம்பாதிக்கின்றோம். ஆனால் அனைவராலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோமா என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
ஜோதிடம் வாழ்க்கையை மாற்றுமா ? (Will Astrology Change Life) ஜோதிடம் கற்பதன் மூலம் சிறு சிறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து சென்று வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம். இன்றைய சூழலில் கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, காதலர்களாக இருந்தாலும் சரி சிறு சிறு விஷயத்திற்காக இன்று பிரிவு, விவகாரத்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை என அதி பயங்கரமாக இன்றைய நவீன காலம் சென்று கொண்டிருக்கிறது. என்ன படித்து என்ன பயன்? எவ்வளவு சம்பாதித்து என்ன பயன் ? வாழ்க்கையில் புரிதல்கள், மன நிம்மதி இல்லையெனில் அனைத்தும் வீண்தான்.
காலச்சக்கரம் மூலம் மனிதனின் வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களை சரி செய்து கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.
உதாரணத்திற்கு, ஒரு மனிதன் நல்ல யோக ஜாதக அமைப்பில் பிறந்துள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு இயற்கையாகவே எல்லாம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவன் இன்னும் முயற்சி செய்தால் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்ல முடியும். அவன் முயற்சி செய்யாமல் இந்த வாழ்க்கையே போதும் என்று முடிவெடுத்து விட்டால் அதுவே அவனுக்கு இறுதியானது. ஆனால் அவன் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளுக்கு தகுந்தவாறு இந்த பிரபஞ்சம் காலச்சக்கரத்தை பயன்படுத்தி யாருடன் யார் எந்த நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று அறிந்து அவனுக்கு அவன் கர்ம வினைகளின் படி நல்லதொரு வாழ்க்கையை கொடுத்துவிட்டு செல்கிறது.
மற்றொரு ஜாதக அமைப்பில் பிறந்துள்ள நபரையும் எடுத்துக் கொள்வோம். இவனுக்கு வாழ்க்கையில் எல்லாம் போராடிக் கிடைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அவன் வாழ்க்கையில் நேரத்தை அறிந்து, காலத்தை அறிந்து செயல்பட்டால் அவனும் வெற்றி பெறுவான்.

இதை தான் வள்ளுவர் “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று கூறுகிறார்.
இறைவனும் இந்த மனிதனுக்காகவே வாழ்க்கையில் சோர்ந்து விடக் கூடாது என்று காலம் அறிந்து செயல்படுவதற்காக ஜோதிட சாஸ்திரத்தையும், பிரசன்னத்தையும் வழங்கியிருக்கிறார்.
ஒரு மனிதன் உரிய காலத்தில் பயிற்சி செய்யாமல், உரிய காலத்தில் முயற்சி செய்யாமல் காலம் கடந்து அவனால் சாதிக்க முடியாது. இதற்கு திருவள்ளுவரும் ஒரு திருக்குறளை சொல்லி இருக்கிறார்.
காலம் அறிந்து செயல்படுதல்
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம்:
சரியான நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து ஒரு செயலைச் செய்தால், உலகத்தையே வெல்ல நினைத்தாலும் அது சாத்தியமாகும்.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம்:
இரவில் வலிமை வாய்ந்த கோட்டானை (Owl), பகல் நேரத்தில் காக்கை எளிதாக வென்றுவிடும். அதுபோல, பகைவரை வெல்ல நினைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற ‘காலம்’ (சரியான நேரம்) மிக அவசியம்.
மேற்கண்ட திருக்குறளின் மூலம் திருவள்ளுவர் அற்புதமான தகவல்களை கூறி இருக்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை அவனது வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு சம்பவத்திலும் நல்லது எது? கெட்டது எது? என அறிந்து செயல்பட்டு வாழ்க்கையில் மனம் சோர்வடையாமல் வாழ்க்கையில் முன்னேறி செல்ல இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதக் கலையே ஜோதிட கலையாகும். ஆயக்கலைகள் 64 கலைகளில் ஜோதிடக் கலையும் ஒன்று.
4. கர்ம சக்கரம்
கர்ம வினைகளின் படி தான் வாழ்க்கையில் பல சம்பவங்கள் (நிகழ்வுகள்) நடந்து கொண்டிருக்கிறது என்று ஒரு கூற்று இருக்கிறது அது சரியா ? என்று கேட்டால், அது சரிதான் கர்ம வினைகளின் படி தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
கர்ம வினை பற்றி புத்தரின் கூற்று, நமக்கு நடக்கும் அனைத்தும் விதி அல்ல; ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு.
கர்மாவை பற்றி புத்தர் கூறிய முக்கிய குறிப்புகள்:
கர்மாவை மாற்ற முடியுமா?
புத்தரின் கூற்று: முடியும். புத்தர், “எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” என்று நம்புவதை எதிர்த்தார்.
பழைய வினைகளை நம்மால் மாற்ற முடியாது (அது அம்பு எய்தது போல). ஆனால், இப்போது நாம் செய்யும் நற்செயல்கள் மூலம் அந்தப் பழைய வினையின் வீரியத்தைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம்.
உதாரணத்திற்கு, ஒரு குடம் உவர் நீரில் (பாவம்), நல்ல தண்ணீர் (புண்ணியம்) ஊற்ற ஊற்ற, அந்த உப்புத் தன்மை குறைவது போலாகும்.
இதை தான் ஜோதிட சாஸ்திரமும் சொல்கிறது நம் முன்னோர்கள் செய்த பாவங்களை, நாம் செய்த பாவங்களை முழுவதுமாக நீக்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தை குறைக்க முடியும். இதைத்தான் புத்தரும் சொல்கிறார். கர்மாவின் தாக்கத்தை குறைத்தாலே பாதி பிரச்சனையிலிருந்து மனிதன் தப்பித்து விடுவான்.
5. ஜாம சக்கரம்
ஜாமச்சக்கரம் என்பதை ஜாமக்கோள் பிரசன்னம் என்று அழைக்கிறோம். ஜோதிட கலையின் ஒரு அங்கமே பிரசன்னம் ஆகும்.
ஜாதகம் என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் கொடுப்பினையை பற்றி குறிப்பிடும். பிரசன்னம் என்பது அந்த கொடுப்பினையை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நிகழ்காலத்தில் கேள்வியாளரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முறையே ஆகும்.
ஜாமச்சக்கரம் என்பது பிரசன்ன சக்கரமாகும். இதை வைத்து தான் நிகழ்காலத்தில் கேள்வியாளரின் கேள்வி நிலை அறிந்து அந்தக் கேள்விக்கான பதிலை பிரபஞ்சத்திலிருந்து ஜாமச்சக்கரத்தின் மூலம் எடுத்து நாம் கேள்வியாளரின் கேள்விக்கு பதில் அளிக்க பயன்படுவதே ஜாம சக்கரமாகும்.
இந்த ஜாம சக்கரத்தை பயன்படுத்தி ஒரு மனிதனின் கர்ம வினைகளின் தாக்கத்தையும், பாதிப்பையும் கண்டறிந்து அவனுக்கு உரிய வழிகாட்டுதலையும், உரிய வழிபாட்டினையும் அளித்து அவனை வாழ்க்கையில் சரி செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு வழிகாட்டலாம்.
| இன்றைய திருக்கணித தமிழ் பஞ்சாங்கம் | Today Thirukanitha Tamil Panchangam |

